கட்டுரை

துணைவி!

அசோகன்

திருச்சியில் தேமுதிகவின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம். மேடையில் உரத்த குரலில் முழங்கிக் கொண்டிருக்கிறார் பிரேமலதா.

அவர் நெற்றில் அணிந்திருக்கும் பொட்டு காற்றில் பறந்துவிடுகிறது. காத்தில பறந்திடுச்சு பரவாயில்லை என்கிறார் மைக்கில். பறந்த பொட்டு மேடையில் இருக்கும் விஜயகாந்த்தின் சட்டையில் குத்தியிருக்கும் பேட்ஜில் ஒட்டியிருக்கிறது. அவர் பேட்ஜை வாகாகப் பிடித்துக் கொண்டு புன்னகைக்கிறார். பிரேமலதா பேச்சை நிறுத்திவிட்டு, குனிந்து விஜயகாந்த் நெஞ்சில் குத்தியிருக்கும் பேட்ஜில் இருந்து பொட்டை எடுத்துக்கொள்கிறார். அதை மைக் முன்னாலேயே நெற்றியில் அழுத்தமாக வைத்துக்கொள்ளும் பிரேமலதா, ‘காற்றில் பறந்துபோனாலும் கேப்டனில்  இதயத்திலிருந்தே நேரடியாக பொட்டு கிடைத்துவிட்டது’ என்கிறார். செமத்தியான டைமிங்! கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. கணவனும் மனைவியுமாக மேடையில் தோன்றுகையில் நிகழக்கூடிய நெகிழ்வான தருணங்களில் இது ஒன்று. கட்சியில் கணவனுக்கு நிகராக மனைவியும் வெளிப்படையாகச் செயல்படக்கூடிய அரசியல் தேமுதிகவில் நிகழ்கிறது. இது தமிழகத்தின் ஆணாதிக்க அரசியலில் ஓர் அபூர்வ நிகழ்வுதான்.

 இன்றைய ’தமிழன் என்று சொல்’திரைப்பட நாயகனும், தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவருமான விஜயகாந்துக்கு ஒரு குணம் உண்டு. முன்வைத்த காலை பின் வைக்க மாட்டார். யார் பேச்சையும் கேட்டு முடிவெடுக்காமல் அவருக்கு தோன்றுவதையே செய்வார். ஆனால் அவரையும்  உரிமையுடன் இயக்கும் நிழலாக இருப்பவர் அவரது மனைவி பிரேமலதா, கட்சியினருக்கு அண்ணியார்!

“கேப்டன் மாதிரி ஸ்கெட்ச் போட யாராலும் முடியாது. இப்படி ஒரு கட்சி ஆரம்பிங்கணுங்கறதை கல்யாணத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தார். அதுக்காகத்தான் எம்.ஜி. ஆர். மாதிரி தனக்கும் ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றம் வேணும்ங்கறதை முடிவு செஞ்சி அம்மன்றங்களை ஒவ்வொரு வருஷமும் ராவுத்தர் மற்றும் ராமு வசந்தனை அனுப்பி நேரில் செக் பண்ணிட்டு வர சொல்வாரு. தன் மன்றங்களில் ஒரு மினி லைப்ரரி இருக்கணுமுன்னும், கூடவே ஒரு அவசர மருந்து சிகிச்சைக்கான கிட் இருக்கணும்னும் வற்புறுத்தி ஒவ்வொரு மன்றத்துக்கு அப்பவே 2500 ரூபாய் வருஷம் தோறும் கொடுத்து வந்தாரு. அத்தோட தன் மன்றங்களின் செயல்பாடுகளை எல்லாரும் தெரிஞ்சிங்கணுங்கறதுக்காக ஒரு பத்திரிகையாளரை வச்சி மன்ற இதழும் கொண்டாந்தாரு.

இவ்வளவு பண்ணினவரைதான் அண்ணி பிரேமலதா 1990-ல் மேரேஜ் பண்ணிக்கிட்டாய்ங்க..அவங்க டிகிரி படிச்சதாலே இங்கிலீஷ் நாலெட்ஜ் இருக்கு.. அதை வச்சி சில விஷயங்களை நாட்டு, உலக நடப்புகளை கேப்டனுக்கு சொல்லுவாங்க. மத்தபடி அரசியலில் என்ன பண்ணனும், யாரு கூட சேரலாம்.. சேரக் கூடாதுங்கறதையெல்லாம் சொல்ல மாட்டாங்க. அதே சமயம் கேப்டனோட காலேஜ், சொத்து விவகாரங்களில் அந்தம்மா மட்டும்தான் அதிகாரம் படைச்சவங்க.. சாம்பிளுக்கு சொல் லணும்னா ஆண்டாள் அழகர் காலேஜூலே டிஸ்கவுண்ட் அல்லது சீட் வேணும்னா கேப்டன் பேரைச் சொன்னா நோ யூஸ்.. அதே சமயம் அண்ணி பேரைச் சொன்னா உடனே சாங்சன் ஆகும்.” என்கிறார் விஷயம் அறிந்த ஒருவர்.

ஆரம்பத்தில் கேப்டனின் ரசிகர்மன்றங்களை ராமுவசந்தனுடன் சேர்ந்து நிர்வகித்துக்கொண்டிருந்த பிரேமலதாவுக்கு கேப்டன் கட்சி ஆரம்பித்தவுடன் அதில் பணியாற்ற ஆரம்பித்தது இயல்பாக நிகழ்ந்த ஒன்று.

“எனக்கு எந்த பதவிக்கும் வரவேண்டும் என்ற எண்ணம் இல்லை. கட்சித் தொண்டர்களிடம் இப்போதுள்ள ‘அண்ணி’ என்ற பதவியே போதும்” என்று சொல்லிவருகிறார் பிரேமலதா.

கோவையில் இந்த ஆண்டு நடந்த தேமுதிக செயற்குழு பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது,“கேப்டன் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியபோது அவர் வீல் சேரில் அழைத்து வரப்பட்டார். இதை பலர் திரித்து பேசினார்கள். இது என் மனதை மிகவும் பாதித்தது” என்று அவர் கூறியபோது கண் கலங்கினார். தொடர்ந்து பேசிய பிரேமலதா, “விஜயகாந்தின் உடல் நிலை பற்றி நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். நான் அவருடன் 100 வருடம் இருந்து அவரை பார்த்துக்கொள்வேன். தே.மு.தி.க.வின் ஒரு உறுப்பினராக நான் அவருடன் இருந்து கட்சி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன்” என்றார். இதுதான் பிரேமலதாவின் ஸ்டைல். கட்சிக்கூட்டங்களில் பேசும்போது கேப்டன் ரசிகராகப் பேசுகிற  அவர், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் பத்திரிகையாளர்களிடமும் தேர்ந்த அரசியல்வாதியாகப் பேசுகிறார்.

கட்சி ஆரம்பித்து விருத்தாசலத்தில் முதல்முறையாக விஜயகாந்த் போட்டியிட்டபோது அவரது பிரச்சாரத்தை திட்டமிட்டு பணிமனைப் பொறுப்பாளராக இருந்தவர் பிரேமலதா. காலையில் இருந்து நள்ளிரவு வரை பம்பரமாகச் செயல்பட்டதை கட்சிக்காரர்கள் நினைவுகூர்கிறார்கள். ஆரம்பத்தில் மேடம், அக்கா என்று அழைத்த தொண்டர்கள் பின்னர் அண்ணியார் என்றே அழைக்கத் தொடங்கினர். “கட்சியின் அடிமட்டத்தொண்டர்கள் வரை மேல்மட்டத் தலைவர்கள் வரை பெயர்களை ஞாபகம் வைத்திருப்பது அண்ணியின் சிறப்பு. பல நேரங்களில் கேப்டனை விட அண்ணியாரிடம் முகம் காட்டவே தொண்டர்கள் விரும்புகிறார்கள். நானெல்லாம் அவர் முன்பு சென்றால் என்னை பெயர் சொல்லி அழைப்பதுடன் என் குழந்தைகள் என்ன வகுப்பு படிக்கிறார்கள் என்பது வரைக்கும் ஞாபகம் வைத்திருந்து விசாரிப்பார்” என்கிறார் கோவையைச் சேர்ந்த ஒரு தேமுதிக பிரமுகர்.”கேப்டன் வேறு; அண்ணியார் வேறு என்றெல்லாம் எங்கள் கட்சியில் இல்லை” என்பது அவரது கருத்து. அதுவே தங்கள் கட்சியின் பலமாகவும் அவர் கருதுகிறார்.

கூட்டணி, கட்சியின் போக்கை கேப்டனின் விருப்பத்துக்கு ஏற்ப தீர்மானிப்பவராகவும் அவரே இருக்கிறார். மேடையில் பிரேமலதா சகல கட்சிகளையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் வறுத்தெடுக்க, கேப்டன் மெல்லிய புன்னகையுடன் ரசிப்பது தேமுதிகவில் அன்றாட காட்சி.

“பிற கட்சிகளில் என்ன நடக்கிறது? கட்சியைத் தொடங்கி சில காலம் ஆனபின்னர் புறவாசல் வழியாக குடும்பத்தினரை அரசுப் பதவிகளில் நுழைப்பார்கள். கேப்டன் நேரடியாக குடும்பத்துடன் வெளிப்படையான அரசியலில் நுழைந்தார். கணவனுக்கு உதவும் இல்லத்தரசியாக நேரடி அரசியலில் பிரேமலதா செயல்படுகிறார். சிறப்பாகவே சர்ச்சைகள் இன்றி அவர் பங்களிக்கிறார். ஆரம்பத்தில் மேடைப்பேச்சுகளில் சரளமின்றி இருந்த அவர் இன்றைக்கு ஒரு ஸ்டார் பேச்சா ளராகவும் ஆகிவிட்டார்” என்பது ஓர் விமர்சகரின் கருத்து.

டிசம்பர், 2015.